ரணில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணட்டும் பிறகு திருத்தச் சட்டங்கள் பற்றி பேசலாம்
எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக இருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்திய பின்னரே கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்று வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
எவரையும் குறித்து வைத்து திருத்தச் சட்டங்களை கொண்டு வரக் கூடாது
குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்து நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவும் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதை தடுப்பதற்காகவும் அரசியலமைப்புத் திருத்தங்களை உருவாக்கக் கூடாது. இப்படியான நோக்கத்தை கொண்டு உலகில் எந்த நாடுகளும் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வருவதில்லை.
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முன்னர் பொதுஜன பெரமுன அதனை ஆராய்ந்து, மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, புதிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தது.
பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. முதலில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வீதியில் செல்லவும் சிந்திக்கவும் சூழலை உருவாக்குங்கள்.
அப்போது நாம் அரசியலமைப்புத் திருத்தங்கள் பற்றி பேசலாம் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவது, அரச உயர் பதவிகளை வகிப்பது இரத்துச் செய்யப்பட்டது.
இதனையடுத்து 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான தடைகள் நீக்கப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்டுள்ள பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசித்துள்ள 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை தடுக்கும் ஷரத்து உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த ஷரத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான வரைவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
21 வது திருத்தச் சட்டம் சர்வதேசத்தின் தலையீடு என்ற சந்தேகம்
இந்த நிலையில், 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஆரம்பம் மற்றும் அதன் குறிக்கோள் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்வதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சாகர காரியவசம் கூறியுள்ளார்.
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு இறுதியில் ஆதரவளிக்க போவதில்லை எனக் கூற மாட்டோம். முதலில் நாட்டுக்காக சரியானதை செய்ய கலந்துரையாடக் கூடிய சூழலை ஏற்படுத்துவதே முதல் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கடந்த 23 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டதுடன் பின்னர் அதன் பிரதிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.