வடக்குக் கிழக்குப் பகுதிகளில் செஞ்சோலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முல்லைத்தீவு - வல்லிபுரம் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ் இன்று(14.08.2026) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
வல்லிபுனம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் பல மாணவர்கள் உயிரிழந்தனர்.

தமிழ் தேசிய பேரவையின் ‘நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு’ ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல் - தவசீலன்
செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின்
வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வு
கடந்த 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 100ற்கும் அதிகமான மாணவிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். இந்தப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வள்ளிபுனம் பகுதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், பொதுச்சுடரை இந்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த செல்வம் நிறோஜினியின் தாயார் செல்வம் மேரிபுஸ்பலதா ஏற்றி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உறவுகளால் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.