தேர்தல் தொடர்பில் பிரதமர் மோடி விடுத்துள்ள எச்சரிக்கை
'எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலில் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என பா.ஜ. வினருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், ஜனவரி 16, 17 திகதிகளில் டில்லியில் நடந்த பா.ஜ. தேசிய செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவமான ஒன்றாக மாறியுள்ளது.
2024 லோக்சபா தேர்தல்
வரும் 2024 லோக்சபா தேர்தலில், மோடியே பிரதமர் வேட்பாளர், பா.ஜ. தேசிய தலைவர் நட்டாவின் பதவிக் காலம் 2024 ஜூன் வரை நீட்டிப்பு ஆகிய முக்கிய முடிவுகள், இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடக்கவுள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய, ஒன்பது மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தல் குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடியே பிரதமர் வேட்பாளர்
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,
“பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஆதரவை பெற முயற்சிக்க வேண்டும் எனவும், முஸ்லிம், கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் பா.ஜ.வை ஆதரிக்க தயாராக இருப்பதையும்” சுட்டிக் காட்டியுள்ளார்.
செயற்குழுவில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர்கள், மாநில அமைப்பு பொதுச்செயலர்கள், தேசிய பொதுச்செயலர்கள், அணிகளின் தேசிய தலைவர்களிடம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோர், தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதன்போது மோடி கூறியுள்ளதாவது,
“கடந்த 2014ல் பா.ஜ.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், 2019-ல் பா.ஜவுக்கு வெற்றி கிடைக்காது என்றும் நமது சித்தாந்த எதிரிகள் நினைத்தனர்.
ஆனால், இப்போது பா.ஜ.,தான் வெற்றி பெறும் என, நம் எதிரிகள் முழுமையாக நம்புகின்றனர். அதனால், தங்களது முழு பலத்தையும் வரும் தேர்தலில் பயன்படுத்துவர்.
எனவே, 2014, 2019 தேர்தலை விட, 2024-ல் நாம் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சர்வதேச சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வெளி சக்திகள் நமக்கு எதிரான வேலைகளை, ஏற்கனவே துவங்கி விட்டன. எனவே, வரும் ஓராண்டில் நாம் கொடுக்கும் உழைப்புதான், 2024 ஜூனுக்கு பிந்தைய ஐந்தாண்டுகளுக்கு பா.ஜ.வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இதை உணர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
நட்டா தெரிவித்த கருத்து
மேலும், செயற்குழுவின் கூட்டத்தில் நட்டா தெரிவித்ததாவது,
“இது நமக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாநிலங்களில், ஆறில் நாம் ஆட்சியை தக்க வைக்க வேண்டும்.
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கர்நாடகாவில் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
ஹிமாச்சலில் வெறும் ஒரு சதவீதம் அதாவது 37 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருக்கிறோம். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.