சர்வதேசத்தின் துணைகொண்டு தமிழ் மக்களை அழித்தவரே மகிந்த: ஜனா எம்.பி ஆதங்கம்
ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதிதான் மகிந்த ராஜபக்ச என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - பட்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
''முன்னாள் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம் எனக் கூறியிருக்கின்றார்.
தமிழ் மக்களை அழித்த ஜனாதிபதி
ஆனால் அவர் 2009 இலே ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதிதான் அவர்.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஒரு உத்தரவாத்தத்தைக் கூறி எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.
2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மகிந்த ராஜபக்ச மீண்டும் தமிழ் மக்களுடன் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என அவர் கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ மேற்கொண்டு அவருடன் இணைந்து ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதற்கு, நாங்கள் எந்த விதத்திலும் தயாராக இல்லை.
மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய சிறிலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக இருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தல்
அதள பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை மீட்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தாலும் பொதுஜனப் பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை.
ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது.
இந்நிலையில் பொதுஜனப் பெரமுனவில் இருக்கின்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள்.
யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |