நாட்டை உலுக்கிய தியத்தலாவ கார் விபத்து.. கைது உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை
2024ஆம் ஆண்டு தியத்தலாவ ஃபொக்ஸ்ஹில் கார் விபத்து தொடர்பில் குறித்த போட்டியின் ஏற்பாட்டாளர்களைக் கைது செய்யுமாறு பண்டாரவளை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பதுளை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
எட்டு பேர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்த இந்த துயரச் சம்பவம் தொடர்பாக இலங்கை ஒட்டோமொபைல் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஷார் ஹமீம் மற்றும் முன்னாள் செயலாளர் ஷெஹான் டி திசேரா ஆகியோர் திருத்த மனு தாக்கல் செய்தனர்.
குறித்த மனுவை பரிசீலித்த பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த லியனகம இந்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விரிவான விசாரணை
போட்டியைக் காண சென்ற பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏற்பாட்டாளர்கள் அடிப்படையில் தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்து, ஏற்பாட்டாளர்களைக் கைது செய்ய பண்டாரவளை மாஜிஸ்திரேட் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன்போது, இலங்கை ஒட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் (SLAS) மற்றும் இலங்கை இராணுவ அகடமியின் பொறுப்பான அதிகாரிகளைக் கைது செய்து முன்னிலைபடுத்தவும், சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிபதியின் உத்தரவு உண்மைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதே நேரத்தில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் பிரசன்ன பண்டார மற்றும் அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் லக்ஷன் பெரேரா ஆகியோர், நீதிபதியின் முடிவுக்கு அவர்கள் உடன்படவில்லை என்று கூறினர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி லியனகம, கைது உத்தரவுகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து, ஜனவரி 19ஆம் திகதி அன்று ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவித்தார்.