புலமைப்பரிசில் பரீட்சை இன்று: முறைமையில் விசேட மாற்றம் (Photos)
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.
இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட இன்று நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள்
இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
காலை 09:30 முதல் 10:45 மணி வரை, இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க நேரம் ஒதுக்கப்படும். அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகு 11:15 மணிக்கு முதலாவது வினாத்தாள் வழங்கப்படும்.
விடைகளை எழுதுவதற்காக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒரு மணித்தியால கால அவகாசம் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது
இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளன தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு இந்த வருடம் மூன்று இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சார்த்திகளுக்கு முன்னரைப் போன்று அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது. ஆனால், பரீட்சார்த்திகள் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் வருகைதந்து, அங்குள்ள படிவத்தில் கையெழுத்திடுவது அவசியமாகும். இது தொடர்பில் பரீட்சார்த்திகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் பரீட்சை
அராலி சரஸ்வதி மஹா வித்தியாலயம்
அராலி சரஸ்வதி மஹா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்று வரும்நிலையில், மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி: கஜிந்தன்
மலையகம்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மலையக பகுதியில் உள்ள மாணவர்கள் மிகவும் ஆர்வமாக தோற்றியுள்ளனர்.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு அப்பகுதி மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
சகல பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
செய்தி :கன்னிகன் சுந்தரலிங்கம்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு சென்றிருந்ததுடன், தமது பிள்ளைகளை பெற்றோர்கள் பரீட்சை நிலையத்திற்கு உற்சாகமளித்து அனுப்பி வைத்துள்ளனர்.
செய்தி:தீபன்
அம்பாறை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18) அம்பாறை மாவட்டத்தில் கடும் மழைக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.
மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி: பாரூக் சியான்
மட்டக்களப்பு
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு பாதுகாப்புடன் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆரம்பமானது.
பட்டிருப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் 13 இணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் 104 பரீட்சை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 9418 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் இதில் 4762 ஆண் பரீட்சார்த்திகளும் 4656 பெண் பரீட்சார்த்திகளும் அடங்குவதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட மாணவர்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
செய்தி:குமார்
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் 34 பரீட்சை மத்திய நிலையங்களில் 2933 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோன்றியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18.12.2022) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 34 பரீட்சை மத்திய நிலையங்களில் 2933 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 14 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்ததுடன் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.
செய்தி - திலீபன்
மட்டக்களப்பு
2022 ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை(18) கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றதாக வலய கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர். 9418 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
செய்தி - ருசாத்





