மெஸ்ஸி தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய காணொளி: காரணம் இதுதான்...!
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் காலிறுதி போட்டிகள் கடந்த வாரம் முதல் இடம்பெறுகின்றன.
இதற்கமைய ஆர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி கடந்த வெள்ளிக்கிழமை(10) இடம்பெற்றது.
காலிறுதி போட்டிகள்
இந்த போட்டியில், ஆட்டமுடிவின் போது இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை கோல்களை பெற்றிருந்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் பெனால்ட்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன்போது, ஆர்ஜென்டினா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது.
இதேவேளை நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ தவறவிட்டது.
இதனடிப்படையில் 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆர்ஜென்டினா அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது.
பரபரப்பை ஏற்படுத்திய வார்த்தைகள்
இந்த போட்டி முடிந்த பிறகு, TyC ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு நேர்காணல் ஒன்றை மெஸ்ஸி வழங்கினார்.
இந்த நேர்காணலில் பதிலளிக்கத் தொடங்குவதற்கு முன்னர் தொலைவில் நிற்கும் யாரோ ஒருவரைப் பார்த்து, "என்ன பார்க்கிறாய் முட்டாளே..? நகர்ந்து போ" என்று அவர் கூறுவதைக் கவனிக்க முடிந்ததுள்ளது.
QUÉ MIRÁS BOBO
— DjMaRiiO (@DjMaRiiO) December 9, 2022
ANDÁ PA ALLÁ BOBO pic.twitter.com/s2D1lbOhj5
ஆனால், அவர் யாரிடம் இவ்வாறு பேசுகிறார் என்பதை அந்த காணொளியில் பார்க்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்போட்டியில் இரண்டு கோல்களை அடித்த நெதர்லாந்து வீரர் வூட் வெகோர்ஸ்ட்டிடம் தான் மெஸ்ஸி அவ்வாறு பேசினார் என்பது, இந்த சம்பவத்தின்போது மற்றொரு பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட வேறொரு காணொளி வாயிலாகத் தற்போது தெரிய வந்ததுள்ளது.
ஆட்டம் முடிந்த பிறகு, மெஸ்ஸியுடன் கைகுலுக்கிக்கொண்டு அவரது ஜெர்ஸியை பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே வெகோர்ஸ்ட் மெஸ்ஸியை அணுகியதாகவும், ஆனால் மெஸ்ஸி அதனை மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மற்றொரு பக்கம் குறித்த நெதர்லாந்து வீரர் ஆத்திரமூட்டும் மனப்பான்மையில் அவரை தூரத்தில் இருந்து பார்த்து மெஸ்ஸி என்று அழைத்ததாகவும் சொல்லப்படுகின்றது.
வெகோர்ஸ்ட்டின் கருத்து
இது தொடர்பில் வெகோர்ஸ்ட் கருத்து தெரிவிக்கையில்,"போட்டிக்குப் பிறகு நான் அவருடன் கைகுலுக்க விரும்பினேன். ஒரு கால்பந்து வீரர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவர் எனக்கு கை கொடுக்கவில்லை. என்னுடன் பேச விரும்பவில்லை.
எனக்கு ஸ்பானிஷ் அந்த அளவுக்குத் தெரியாது. ஆனால், அவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளைக் கூறினார். எனக்கு கவலையாக உள்ளது.”என்று கூறியுள்ளார்.