ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிப்பு
2004ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகியுள்ளன.
இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களையும் காணாமல் போன உறவுகளையும் நினைவுகூரும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
மலையகம்
அந்தவகையில், சுனாமி ஆழிப்பேரலையின் 20 ஆண்டுகள் நிறைவடைவை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
செய்தி - திருமால்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு (Batticaloa) - புதுக்குடியிருப்பில் இன்று (26) காலை 8.05 மணியளவில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
செய்தி - ஷான்
மட்டக்களப்பு - நாவலடி சுனாமி தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுனாமி நினைவுத்தூபியில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
செய்தி - குமார்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2004 சுனாமி அனர்த்தத்தில் இழந்தோரை நினைவுகூரும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
செய்தி - யது
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு தற்போது ஆர்மபமாகியுள்ளது.
இதன்போது, ஈகை சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவு துபிக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு குறித்த நிகழ்வுகள் ஆர்மபமாகியுள்ளன.
செய்தி - எரிமலை
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் எற்பாட்டில், ஆழிப் பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தேசிய கொடியேற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
செய்தி - கஜி
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் பலியான உறவுகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சுனாமிப் பொது நினைவிலையத்தில் உடுத்துறை இடம்பெற்றுள்ளது.
செய்தி - தீபன்
திருகோணமலை
20 ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று காலை 9.00 மணி அளவில் மூதூர் இறங்குதுறைமுக வாசலில் சுனாமி நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் 2004.12.26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலையினால் மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மரணித்தவர்களுக்கு நினைவஞ்சலியும் மற்றும் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றுள்ளன.
செய்தி - ரொஷான்
கிண்ணியா
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, இன்று (26) கிண்ணியாவில் பல இடங்களில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியனவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட, சுனாமி நினைவு தின பிரதான வைபவம் கிண்ணியா கடற்கரை பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
செய்தி - கியாஸ் ஷாபி
முல்லைத்தீவு
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர்.
இவ்வாறு ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல், முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2024 இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு - கள்ளப்பாட்டைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2024 இன்று கள்ளப்படு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
செய்தி - ஷான்
வவுனியா
வவுனியா - கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவாக விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் அகிலாண்டேஸ்வரர் ஆலய தர்மகர்த்தா சபையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
செய்தி - திலீபன்
புத்தளம்
சுனாமியினால் உயிர்நீர்த்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.
2004.12.26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூரி இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
செய்தி - அசார்தீன்