பதுளையில் பாடசாலைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட 2000 திருக்குறள் புத்தகங்கள்
பதுளை(Badulla) மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையே மாணவர்களின் பயன்பாட்டுக்காக திருக்குறள் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் உள்ள ஆறு மாகாணத்திலும் காணப்படும் பாடசாலைகளுக்கு அப்பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவர்களின் பயன்பாட்டுக்கென திருக்குறள் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக இது அமைந்துள்ளது.
இலங்கை முழுவதும் பத்தாயிரம் புத்தகங்களை கல்விச்செயற்பாட்டுக்கென பகிர்ந்தளிக்கும் தங்களின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக தன்னார்வமாக புத்தகங்களை வழங்கி வைத்த தன்னார்வலர் இது தொடர்பில் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் திருக்குறளில் இருந்து ஒழுக்க நெறிகளை கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக திருக்குறள் நூல்களை நன்கொடை செய்துள்ள தன்னார்வலர் குறிப்பிடுகின்றார்.
வழங்கப்பட்ட புத்தகங்கள்
ஆறு மாகாணங்களில் இயங்கிவரும் 863 பாடசாலைகளில் கற்கும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் திருக்குறளிலிருந்து ஒழுக்க நெறிகளை கற்கும் நோக்கோடு 2000 புத்தங்கள் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படது.
இந்நிகழ்வானது பதுளையில் நேற்று முன் தினம்( 12.08.2024) நடைபெற்றுள்ளது. இதனை கல்வி இராஐங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமாரின் வழிகாட்டலில் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் மலையகப் பிரதேசங்கள் சார்ந்த ஆறு மாகாணங்களிலும் உள்ள பிள்ளைகள் அனைவரும் பயன்பெறுவார்கள்.
இந்த முயற்சிக்கு ஆதரவு தந்த அனைத்து உறவுகளிற்கும் கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன் என நன்கொடையளித்த தன்னார்வலர் யோகம் பத்மநாதன் இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தன் நன்றியினை தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கது.
சட்ட முரணான செயற்பாடுகள்
உலகத்தில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் இரண்டாவதாக திருக்குறள் அமைந்துள்ளது.
உலகத்தமிழ் மறையாக போற்றப்படும் திருக்குறளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்களைக் கொண்ட 2000 திருக்குறள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க முற்பட்ட இந்த செயற்பாடு தொடர்பில் கல்விச் சமூகம் சார்ந்த பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
அறநெறிக் கருத்துக்களை மாணவர்களிடையே ஊட்டி வளர்க்கப்படுவதன் மூலம் நாளைய சமூகத்தில் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகள் நிகழ்வதை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டனர்.
அன்புப்பரிசுகள்
வாசிப்பதால் வரலாறை அறிய முடியும். நல்ல அனுபவங்களைப் பெற முடியும். தேர்ந்த ஆளுமைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.
வாசிப்பு என்பது தற்காலத்தில் ஏற்பட்டுள்ள அறிவியல் மேம்பாட்டால் பல்வழி கொண்டதாக இருப்பதும் நோக்கப்பட வேண்டும்.
ஆயினும் புத்தகங்களை வாசிப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் அதிகளவிலான நன்மைகளை தந்துவிடும் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நூல்களை வாசிப்பதிலும் பார்க்க அச்சிட்ட புத்தகங்களை படிப்பது தொடர்பிலுள்ள அனுகூலங்களை இன்றைய இளம் சமூகம் புரிந்துகொண்டுள்ள அளவு மிகவும் குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் நோக்கோடு பகிரப்படும் பொருட்களுள் பயனுடைய கருத்துக்களைக் கொண்ட நூல்களை அன்பளிப்பாக அன்புப்பரிசாக கொடுக்கும் பழக்கம் உருவாக்கப்பட்டு தொடரப்பட்டால் அது ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கு ஆரோக்கியமான நல்ல பல மாற்றங்களை தந்து நிற்கும் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |