பாதாள உலகக்குழுக்கள் நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க
பாதாள உலகக்குழுக்கள் அல்லது போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாட்டில் இடம்பெறும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிபடையின் அலுவலகமொன்றை நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனை கூறியுள்ளார்.
குற்றவாளி கும்பல்களுக்கிடையில் மோதல்கள்
சாதாரண குற்றச்செயல்களுக்கும் விசேட குற்ற செயல்களுக்கும் இடையில் இன்று வித்தியாசம் இல்லாமல் போய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றாக இணைந்திருந்த கும்பல்களை நாம் கடந்த காலங்களில் குற்றவாளிகள் குழுக்கள் என குறிப்பிட்டோம், எனினும் இன்று அந்த குற்றவாளி கும்பல்களுக்கிடையிலேயே மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும்,போதைப்பொருள் வர்த்தகத்திலும் இவ்வாறு குழு மோதல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டங்கள்
பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும் எனவும் அதனை கட்டுப்படுத்த விசேட புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பிற்கு ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கு விசேட அதிகாரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |