நாளொன்றுக்கு 20 பேர் புதிதாக போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் நிலை! அஜித் ரோஹண தகவல்
உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகளின்படி இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 20 பேர் புதிதாக போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், போதைப்பொருள் பாவனையானது தற்போது பாரிய தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், அது இந்நாட்டின் பாடசாலை முறையிலும் பரவியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உயரும் எண்ணிக்கை
உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி, இலங்கையில் சுமார் 200,000 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 20 புதிய நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள். ஒரு வருடத்தில் அந்த எண்ணிக்கை எவ்வளவு உயரும் என்று கற்பனை செய்து பாருங்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு ஒரு நாளைக்கு இரண்டு டோஸ் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா தேவைப்படலாம் என்றும் சுட்டிக்காட்டும் அஜித் ரோஹன, இந்த நிலைமை தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது என்றும், போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தேடுவதற்கு சில அடிமையான நபர்கள் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதிகரித்து வரும் இந்த போதைப்பொருள் பிரச்சினையை சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களால் மட்டும் தீர்க்க முடியாது என வலியுறுத்திய அஜித் ரோஹன, போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு சமூகம், மனநல ஆலோசகர்கள் மற்றும் ஏனைய நிபுணர்களின் பங்களிப்பு அதிகம் தேவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.