போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் இலட்சக்கணக்கில் வழக்குகள் பதிவு!
இந்த ஆண்டின் கடந்த 10 மாத காலப் பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இலங்கையில் ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் பாதுகாப்புப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 320 சுற்றிவளைப்புகளில், போதைப்பொருள் தொடர்பில் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 938 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 60 இலட்சத்து 19 ஆயிரத்து 343 இற்கும் அதிகமானவர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர்.
வழக்குகள் பதிவு
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வகைகளில் 2 ஆயிரத்து 539.5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் கைப்பற்றப்பட்டு, அவை தொடர்பாக 66 ஆயிரத்து 593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயிரத்து 482.8 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டு 58 ஆயிரத்து 130 வழக்குகளும், 14 ஆயிரத்து 434.4 கிலோகிராம் கஞ்சா மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டு 58 ஆயிரத்து 724 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
32.6 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டு 91 வழக்குகளும், 30 இலட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 808 வழக்குகளும், 575 கிலோகிராம் வேறு போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு ஆயிரத்து 474 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.