பொது சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது
ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை மறைத்து வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(30.10.2026) இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது, செங்கலடி பொது சுகாதார பணிமனையின் கீழ் உள்ள ஏறாவூர் 4 ம் பிரிவு பிரதேசத்தில் கடமையாற்றி வரும் பொது சுகாதார பரிசோதகர் அந்த பகுதியில் உள்ள உணவகங்களின் சுகாதாரம் தொடர்பாக பரிசோதித்து வந்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதன்போது, சுகாதாரமற்ற உணவகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சுகாதார பரிசோதகரை எப்படியாவது பொலிசார் கைது செய்ய வைத்து வேலை இல்லாமல் செய்து பழிவாங்க வேண்டும் என குறித்த உணவக உரிமையாளர் திட்டமிட்டு இரு அடியாட்களுக்கு ஆலோசனை வழங்கி பணம் வழங்கி கொண்டார்.

இதனடிப்படையில் குறித்த இரு அடியாட்களும் குறித்த பொது சுகாதார பரிசோதகரை கண்காணித்து வந்த நிலையில் சம்பவ தினமான 26 ஆம் திகதி ஏறாவூர் 4ஆம் பிரிவிலுள்ள பாடசாலை வீதியில் உள்ள கிளினிக் நிலையத்துடன் இருக்கும் அவரது காரியாலயத்தின் முன்னாள் வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காரியாலயத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இதன் போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்று அவரின் மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருள் கொண்ட 3 பக்கற்றுக்கள் ஒளித்து வைத்து சலோப்ரோப்பினால் ஒட்டியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து அவர் வீதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காரியாலய பகுதிக்கு கொண்டு சென்ற நிறுத்திவிட்டு காரியாலய கதிரையில் இருந்து கொண்டு மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அதில் கீழ் பகுதியில் ஏதோ ஓட்டப்பட்டிருப்பதை கண்டு கொண்டதையடுத்து அங்கு சென்று பார்த்த போது அதில் சலோப் ரோப்பால் மூன்று சிறிய பக்கற்றுக்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொலிசார் சென்று பரிசோதித்த போது அது ஜஸ் போதைப் பொருள் என தெரியவந்ததையடுத்து பொலிஸார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை பரிசோதனை செய்தனர்.

இதன்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நிறுத்தி வைத்திருந்த பொது சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை மறைத்து வைக்கும் வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணையில் அந்த நபர்களை கண்டறிந்து அவர்களை இன்று கைது செய்து விசாரணையில் அவர்கள் உணவக உரிமையாளர் ஒருவர் பணம் வழங்கி செய்ய சொன்னதாக போலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 46 வயதுடையவர் மற்றும் ஏறாவூர் 6ம் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.