கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது இருவர் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(19.7.2026) மெற்கொள்ளப்பட்டுள்ளது.
79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
குறித்த நபர்கள் இந்த சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26 வயதுடைய இந்த சந்தேக நபர்கள் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களை வசிப்பிடமாகக் கொண்ட, அந்நாட்டு உணவகமொன்றில் பணிபுரிபவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.
சந்தேகநபர்கள் இருவரும் இந்த சிகரெட் தொகையை கம்போடியாவில் கொள்வனவு செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கு வந்து, அங்கிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பிணை
இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 53,200 சிகரெட்டுகளைக் கொண்ட 266 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் நாட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.