மலேசியாவிலிருந்து வந்த 3 மர்மப் பொதிகள்: 181 மில்லியன் ரூபா போதைப்பொருள்
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பொதிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 181.93 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹஷீஷ்' மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருள் தொகை, பேலியகொடையில் அமைந்துள்ள இலங்கை சுங்கத் திணைக்கள களஞ்சியசாலையில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்று பொதிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவை தடுத்து வைக்கப்பட்டன.

குறித்த பொதிகளை உரிமை கோரிப் பெற்றுக்கொள்ள வருபவர்களைக் கைது செய்யும் நோக்கில் அதிகாரிகள் காத்திருந்த போதிலும், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் எவரும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இதனையடுத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளின் முன்னிலையில் குறித்த மூன்று பொதிகளும் திறந்து சோதனை செய்யப்பட்டன.
இதன்போது, அவற்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் 193 கிராம் எடையுடைய ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் தெருமதி சுமார் 181.93 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட சுங்க விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.