பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம்: செந்தில் தரப்பு கோரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் சம்பள நிர்ணய சபைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலேயே செந்தில் தொண்டமான் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
1700 ரூபா அடிப்படை சம்பளம்
தற்போதைய வாழ்வாதாரச் செலவுகளை கணக்கிட்டு மக்கள் வாழ்வதற்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்துள்ளோம்.
இந்த தொகையை சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெற்றுக்கொடுக்க இ.தொ.கா முழுமையான பணிகளையும் ஆரம்பித்துள்ளது.
மேலும், கம்பனிகளுடன் அடுத்துவரும் சுற்றுப் பேச்சுகளில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டால் சம்பளம் விரைவாக கிடைக்கும். இல்லாவிட்டால் சம்பள நிர்ணய சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பின் ஊடாக சம்பளம் கிடைக்கப்பெறும். சம்பளக் கோரிக்கைக்கு அப்பால் வரவு - செலவுத் திட்ட கொடுப்பனவு மற்றும் ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதியையும் கோரியுள்ளோம்.” என்றார்.
இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துக்கொண்டபோதே இந்த உதவியை வழங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |