திருகோணமலையில் காணாமல்போன மாணவர் நிட்டம்புவ பகுதியில் கண்டுபிடிப்பு
புதிய இணைப்பு
திருகோணமலையில் நேற்று (26) காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன், இன்று நிட்டம்புவ பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய மாணவன், பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததை அடுத்து இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவனின் உடலில் அடி காயங்கள்
திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியின் மகனான எம்.எல். முன்சித் என்ற மாணவனே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.
நேற்று(26) பாடசாலைக்குச் சென்ற நிலையில் கடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட இம்மாணவன், கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்து, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.

குறித்த மாணவன் மீட்கப்படும் போது உடலில் அடி காயங்கள் காணப்பட்டதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் திருகோணமலையிலுள்ள மாணவனின் பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலறிந்த பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக நிட்டம்புவ நோக்கி விரைந்துள்ளனர்.
நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாத நிலையில், சமுத்திரகம பகுதியில் அவரது சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, மாணவன் நிட்டம்புவையில் மீட்கப்பட்டுள்ளார்.
சமூகவலைதளங்களில் பகிரப்படும் மற்றுமொரு தகவல்
இதேவேளை, குறித்த மாணவருடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மற்றொரு தகவல் குறித்து பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

திருகோணமலை பேருந்து தரிப்பிடத்தில் காணாமல்போனதாகக் கூறப்பட்ட 22 வயதுடைய யுவதி ஒருவர், தனது காதலனுடன் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த யுவதியின் சம்பவத்திற்கும், மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
மாணவன் எதற்காகக் கடத்தப்பட்டார்? கடத்தல்காரர்கள் யார்? என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
நேற்றையதினம்(26) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, திருகோணமலை நீதிமன்ற வீதியை சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் பாடசாலை மாணவர் நேற்று (26) காலை முதல் காணாமல்போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் உள்ள பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவர், நேற்று காலை பாடசாலைக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில்,மாலை நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவர் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் எண்ணியிருந்தனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
இருப்பினும், மாணவர் நேற்று பாடசாலையில் நடைபெற்ற தவணைப் பரீட்சைக்கும் சமூகமளிக்கவில்லை என்பதை அறிந்த பாடசாலை நிர்வாகம், இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதுடன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்திற்கு அருகிலுள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
தகவல் வழங்குமாறு கோரிக்கை
காணாமல் போன மாணவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த மாணவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொலிஸாரும் உறவினர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மற்றும் மாணவி ஒருவர் ஆகியோரும் இவ்வாறு காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த்த முச்சக்கரவண்டி சாரதி கடும் காயங்களோடு மயக்கமடைந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பரபரப்படைய வேண்டாம் என்றும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri