இந்தியாவிற்குச் சென்ற நாமலுக்கு CID அழைப்பாணை - அரசியல் பழிவாங்கல் ஆரம்பம்
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியா சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
நாமல் இந்தியா சென்றிருப்பதனை அறிந்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவு
இந்த அழைப்பாணையானது நேற்று காலை 9.50 மணியளவிலேயே தங்காலை கார்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் இந்திய விஜயம் குறித்து நீதிமன்றத்திற்கும் பொலிஸாருக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியப் பயணத்தின் காரணமாக ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியாது என்பது குறித்து ஏற்கனவே நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்
இது பொலிஸாரின் நடவடிக்கை அல்ல, மாறாக மக்கள் விடுதலை முன்னணியின் பொலிஸாரே அரசியல் இலாபத்திற்காக இவ்வாறு செயற்படுகின்றனர் என சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் தேவைகளுக்காக பொலிஸ் திணைக்களத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர் பொலிஸ் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.