திருகோணமலையில் ஒரே நேரத்தில் காணாமல் போனதாக கூறப்படும் மூவர்! மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம்
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
நேற்றையதினம்(26) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, திருகோணமலை நீதிமன்ற வீதியை சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் பாடசாலை மாணவர் நேற்று (26) காலை முதல் காணாமல்போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் உள்ள பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவர், நேற்று காலை பாடசாலைக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில்,மாலை நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவர் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் எண்ணியிருந்தனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
இருப்பினும், மாணவர் நேற்று பாடசாலையில் நடைபெற்ற தவணைப் பரீட்சைக்கும் சமூகமளிக்கவில்லை என்பதை அறிந்த பாடசாலை நிர்வாகம், இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதுடன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்திற்கு அருகிலுள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
தகவல் வழங்குமாறு கோரிக்கை
காணாமல் போன மாணவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த மாணவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொலிஸாரும் உறவினர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மற்றும் மாணவி ஒருவர் ஆகியோரும் இவ்வாறு காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த்த முச்சக்கரவண்டி சாரதி கடும் காயங்களோடு மயக்கமடைந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பரபரப்படைய வேண்டாம் என்றும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.