யாழில் நடைபெறவுள்ள 16ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி
இலங்கையில் வணிகம், புத்தாக்கம் மற்றும் நிலைபேற்றியலை வலுப்படுத்துகின்ற 16ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் வடக்குப்பகுதியில் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பன்முக வர்த்தகக் கண்காட்சியான யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிகழ்வானது. தொடர்ந்து 16 தடவையாகவும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
400இற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்கள்
குறித்த நிகழ்வானது ஜனவரி 23 முதல் 25 வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்பிராந்தியத்தில் மிகவும் நிலைபெற்றுள்ள வர்த்தக மேடையாக மாறியுள்ள இக்கண்காட்சி வட மாகாணத்தின் மத்தியில் பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றி, வணிக தொடர்புகளை வளர்த்து தொழில்நுட்பத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிக்கும்.
கடந்த ஆண்டு நிகழ்வில் இலங்கையின் அனைத்து பாகங்களிலுமிருந்து 78,452 பார்வையாளர்கள் பங்குபற்றியதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் துறை தலைவர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கலாக வணிகப் பிரதிநிதிகள் 5,000 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் சந்தை ஆய்வு ஆகியவற்றுக்கான முதன்மையான மேடை என்ற இக்கண்காட்சியின் அந்தஸ்தை மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையான வரவுகள் பிரதிபலிக்கின்றன. பலவகைப்பட்ட கைத்தொழில் துறைகள் மத்தியில் விரிவான தயாரிப்புக்கள் சேவைகள், மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 400இற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்களை இக்கண்காட்சி நிகழ்வு கொண்டிருக்கும்.