நாடாளுமன்றத்தில் 159 லக்ஷ்மன் கதிர்காமர்கள்.. ஆளும் தரப்பின் வினோதமான கருத்து!
நாடாளுமன்றத்தில் உள்ள 159 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் 159 லக்ஷ்மன் கதிர்காமர்கள் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறிய கருத்தை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விமர்சித்துள்ளார்.
யூடியூப் தனியார் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“லக்ஷ்மன் கதிர்காமர் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் அறியாமல் இருக்கலாம். 159 உறுப்பினர்களுடன் சமப்படுத்தியதால் இளைஞர்கள் அவரை ஒரு கோமாளி என நினைக்கலாம்.
கல்விமான்
லக்ஷ்மன் கதிர்காமர், டிரினிட்டி கல்லூரியில் கல்வி பயின்ற பாடசாலையின் சிறந்த மாணவர் ஆவார். அதன் பின்னர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்ற கதிர்காமர், அங்கும் சிறந்த மாணவராக திகழ்ந்தார்.
அந்த காலத்தில் வியட்னாம் இரண்டாக பிரிந்திருந்த போது, தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகினர்.

அப்போது, அந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு 'Amnesty International' அமைப்பு, லக்ஷ்மன் கதிர்காமரையே அங்கு அனுப்பி வைத்தது.
அந்த அளவுக்கு கல்விமானாகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்த லக்ஷ்மன் கதிர்காமர், சுதந்திர இலங்கையின் ஆகச்சிறந்த வெளிவிவகார அமைச்சராவார். அவரின் சிறந்த பேச்சால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தடை செய்யப்பட்டது.
அவர் 2001 முதல் 2004 வரை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவருக்கு பிரதமருக்கு நிகரான பாதுகாப்பு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்டது.
தவறான ஒப்பீடு
ஏனெனில், அவருக்கே நாட்டில் மிகப்பெரிய உயிர் அச்சுறுத்தல் இருந்தது. உயிர் அச்சுறுத்தல் இருந்தவர்களை கடந்த கால அரசாங்கங்கள் இவ்வாறே பாதுகாத்தன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதால் அவர் 2005ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். தற்போது அவரை பிழையாக ஆங்கிலம் கதைக்கும் ஹந்துன்நெத்தியுடனேயே சமப்படுத்துகின்றனர்.

ஆங்கில வார்த்தைகளை கஷ்டப்பட்டு இணைத்து எங்கள் நாட்டு பொலிஸாரை இனவாதிகள் என கூறும் விஜித ஹேரத்துடனேயே அவரை சமப்படுத்துகின்றனர்.
பாதாள உலகத் தலைவர்களை வரவேற்க விமான நிலையம் செல்லும் ஆனந்த விஜேபாலவுடனேயே அவரை சமப்படுத்துகின்றனர்.
இதனை பார்க்கும் போது, அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லவில்லை எனில், அவரே தவறான முடிவு எடுத்து இருந்திருப்பார் என நான் நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |