மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்: வெளியான சுற்றறிக்கை
நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி) மாலை வரை இருநூறு பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும்பாலும் பேருந்துகளை கோரியுள்ளன.
அரசு சுற்றறிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபையின் 107 டிப்போக்களின் கீழ் நான்காயிரத்து எழுநூறு பேருந்துகள் இயங்கி வருகின்றன.இதில் ஆயிரத்து ஐநூறு பேருந்துகளுக்கான கோரிக்கை கிடைத்துள்ளது.
இந்த பேருந்துகளை வழங்கும்போது, அரசு சுற்றறிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். முழுத் தொகையும் செலுத்தாமல் ஒரு பேருந்து கூட தரப்படாது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |