கொழும்பில் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 150,000 பேர்!கணக்கெடுப்பில் வெளியான தகவல்
கொழும்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 150,000 பேர் இன்னும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை என்று கொழும்பு பிரதேச செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் 557 கிராம அலுவலர் பிரிவுகளில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய யசரத்ன, தடுப்பூசி போடப்படாத இந்த பெரியவர்களை அடையாளம் கண்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
30 வயதுக்கு மேற்பட்ட 13 இலட்சத்து 34 ஆயிரத்து 947 பேர் கொழும்பு மாவட்டத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 90% க்கும் அதிகமானோர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாதவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று யசரத்ன குறிப்பிட்டார்.
சுகாதார அதிகாரிகள் இந்த வாரத்திற்குள் 46,672 சிரேஷ்ட குடிமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த எதிர்பார்க்கிறார்கள் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்
