புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்புத் திட்டம்
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்தாண்டு பிறப்பையொட்டி தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தலைநகரில் மாத்திரம் சுமார் 1200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
வீதியோரங்களில் அல்லது நடைபாதைகளில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளையதினம்(31) கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் குருந்துவத்தை ஆகிய பகுதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் காலி முகத்திடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
மாற்று வழி
அதன்படி, காலி முகத்திடல் வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள், சாரணர் அணி மாவத்தை சந்தி ஊடாகத் திருப்பப்பட்டு, மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக கொள்ளுப்பிட்டியை சென்றடைய முடியும்.

மேலும், புறக்கோட்டை பழைய மெனிங் சந்தை, லேக் ஹவுஸ் தரிப்பிடம் மற்றும் கோட்டைப் பகுதியில் சில இடங்களில் கட்டண அடிப்படையில் வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தால் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, அறிவிக்கப்பட்டுள்ள மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.