இலங்கையில் 1200 இந்திய படையினர் இறந்தனர்-வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி
நாட்டில் நடந்த போரில் அனைத்து பிரதேசங்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர் எனவும் ஒரு சமூகத்தையோ, ஒரு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் அதில் பாதிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறந்த நோக்கத்துடன் புனர்வாழ்வு தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறுகிய நோக்கத்துடன் இது சம்பந்தமாக அர்த்தப்படுத்துவது பொருத்தமற்றது.
போரில் 26 ஆயிரம் படையினர் இறந்தனர்-புலிகளின் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்
நாட்டில் நடந்த பிரிவினைவாத போர் காரணமாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களோ, ஒரு பகுதியை சேர்ந்தவர்களோ பாதிக்கப்படவில்லை. நாட்டை பாதுகாக்க 26 ஆயிரம் படையினர் உயிர்களை தியாகம் செய்தனர்.
விடுதலைப் புலிகளுடனான போரில் ஆயிரத்து 200 இந்திய படையினர் மரணத்தினர். அனைத்து இனங்களையும் சேர்ந்த பலர் இறந்தனர். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.
இவை அனைத்துக்கும் பின்னர் 2009 ஆம் ஆண்டு இந்த போர் முடிவுக்கு வந்த பின்னர், தவறாக வழிநடத்தப்பட்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த 12 ஆயிரத்து 194 இளைஞர்கள் அரச படைகளிடம் சரணடைந்தனர். அவர்கள் சரணடைந்த பின்னர், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, வழக்குகளை தீர்க்க முயற்சித்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
நீண்டகாலம் வழக்கு விசாரணைகள் தொடர்நதும் நடந்துக்கொண்டிருக்கும். சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குடன் தொடர்புடையவர்கள் சிறையில் இருக்கின்றனர்.
இதனால், குறுகிய வழியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அப்போது இருந்தவர்கள் அனைவரும் இணைந்து,மிகப் பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி சமூகத்துடன் இணைத்தனர்.
அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் வெளியில் வந்து தமது வேலைகளை செய்ய முடிந்துள்ளது. கடந்த வருடம் நான் நீதியமைச்சராக இருந்த போது, வடக்கிற்கு சென்றேன்.
அப்போது சுமார் 200 இளைஞர்களை சந்திக்க முடிந்தது. அவர்கள் அனைவரும் தொழில்களை செய்து, நன்றாக வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக உதவுமாறே அவர்கள் கோருகின்றனர்.
அந்த இளைஞர்களை சிறையில் அடைத்து வழக்கு தாக்கல் செய்திருந்தால், அவர்களுக்கு எதிரான வழக்குகள் தற்போதும் நிலுவையில் இருந்திருக்கும். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களுக்கு வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது, தொழிலையும் செய்ய முடியாமல் போயிருக்கும்.
அரசாங்கத்தினாலும் செலவுகளை சமாளிக்க முடியாமல் போயிருக்கும். அதேபோல் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் தொடர்பில் எமக்கு பாரிய பிரச்சினை இருக்கின்றது.
இளைஞர்களுக்கு குற்றங்களுடன் தொடர்பு இருந்தால், சாட்சியங்கள் இருக்குமாயின் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அடிப்படைவாத ரீதியில் ஒரு கொள்கையை கொண்டிருப்பார்கள் என்ற காரணத்தினால் தினமும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து வழக்குகளை தொடுத்து கொண்டு இருக்க முடியுமா?.
அதற்கு சட்டத்திலும் இடமில்லை. அடிப்படைவாத கொள்கைகளை கொண்டுள்ளவர்களை புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தி, சமூகமயப்படுத்த வேண்டும். எவ்வளவு காலத்திற்கு வழக்குகளை நடத்துவது. இலங்கையில் வழக்கு ஒன்று விசாரித்து முடிய எவ்வளவு காலம் செல்லும் என்பது நாம் அறிவோம்.
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுக்கு அடிமையான அதிகளவானோர் இருக்கின்றனர். அவர்களை பிரித்து அடையாளம் காண வேண்டும். இவர்களுக்கு மேலே சர்வதேச ரீதியில் தொடர்புகள் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு கீழே நாடு முழுவதும் விநியோகிக்கும் வலையமைப்பை சேர்ந்த சுமார் 500 பேர் இருக்கின்றனர். போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை விரட்டி செல்வதில் பயனில்லை. அவர்களை சிறையில் அடைத்து பயனில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும்.
நெத்தி மீன்களை துரத்தி சென்று பிடித்து சிறையில் அடைத்து சிறைச்சாலைகளை நாம் நிரப்பி வருகின்றோம். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படுகிறன.
சுறா மீன்களாக போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களில் வழக்குகளை விசாரிக்க நேரமில்லை. அவர்கள் தப்பிச் சென்று விடுகின்றனர் எனவும் அமைச்சர் அலி சப்றி மேலும் தெரிவித்துள்ளார்.
