மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரில் உள்ள வர்த்தக நிலையங்களை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பிரதேசமும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
பொலிஸாரும், இராணுவத்தினரும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது.
காத்தான்குடியின் இரு எல்லைப்பகுதிகளிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்தான்குடி பகுதியிலிருந்து வெளியேறுவோர் தொடர்பிலும் காத்தான்குடிக்குள் நுழைவோர் தொடர்பிலும் கண்காணிப்பட்டுகின்றன.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1015 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளனர்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் களுவாஞ்சிகுடியை சேர்ந்த இருவரும், வாழைச்சேனை பகுதியில் ஒருவரும், காத்தான்குடி பகுதியில் மூவரும், ஓட்டமாவடி பகுதியில் ஆறு பேருமாக 12 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
காத்தான்குடி பகுதியில் 665 பேர் சோதனைக்குப்படுத்தப்பட்டதில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.
இதில் 23 பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்கள். மூவர் மட்டக்களப்பு பகுதியையும், ஒருவர் பட்டிப்பளை பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதேபோன்று மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 549 அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 23 பேர் காத்தான்குடி பகுதியையும், இருவர் மட்டக்களப்பு பகுதியையும், ஒருவர் ஆரையம்பதியையும் சேர்ந்தவர்களாவர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கொரோனா செயலணி கலந்துரையாடி காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரத்துக்குள் உள்ள கடைகள் கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1015 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காத்தான்குடி சுகாதார பிரிவில் 300 அன்டிஜன் சோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








