குழந்தைகள் உட்பட 12 இலங்கை தமிழர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்பு (Video)
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற 12 பேரை இந்திய கடலோர காவல் படையினரால் மீட்டுள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக கடற்றொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கை- யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த கலைக்குமார், ஆனந்தினி, தில்லையம்மாள் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த சசிகரன், கலை செல்வி உள்ளிட்ட 12 பேரும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து பின் 2019 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை (20) அதிகாலை ஒரு படகில் புறப்பட்டு இன்று காலை சுமார் 7 மணி அளவில் தனுஷ்கோடி இரண்டாம் மணல் திட்டில் வந்திறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
பட்டிணி சாவு
தொடர்ந்து இலங்கை தமிழர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. விலைவாசி ஒரு பக்கம் உயர்வு,மறுபக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
எனவே பட்டிணி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை சேர்ந்த ஒருவரிடம் வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் எங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆத் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.