தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா - தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண் பிள்ளையை தவறான நடத்தைக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபருக்கு, எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த நபருக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தது.
சாட்சியங்களில் உறுதிச் செய்யப்பட்ட குற்றம்
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில், அவருக்கு எதிராக அரச சட்டத்தரணியினால் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், வழக்கு தொடுனர் தரப்பு குறித்த குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா, குறித்த சந்தேக நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டதரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், வழக்கு நடவடிக்கையின் போது சந்தேக நபர்,தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், பெருகி வரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பனவே குறித்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தனது, தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி.. பதிவான வரலாற்றுச் சம்பவம்