துறைமுகத்தில் சிக்கியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
சுங்க விதிமீறல்கள்
இந்த வாகனங்களில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகியுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக எந்தவித சுங்க விதிமீறல்களும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், உரிய காலத்திற்குள் விடுவிக்கப்படாத வாகனங்களை ஏலம் விடவோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்யவோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் உரிய வரிகளை செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யத்தவறினால், அந்த பொருட்களை விற்பனை செய்து அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை
சம்பந்தப்பட்ட வரிகளைச் செலுத்திய பிறகு மீதமுள்ள பணத்தை துறைமுகம் மற்றும் களஞ்சிய கட்டணங்களை செலுத்த பயன்படுத்தலாம். அந்த பணம் செலுத்துதல்களுக்கு பிறகு ஏதேனும் பணம் மீதமிருந்தால், அவை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நியாயமான காரணங்களால் சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri