நாட்டில் கோவிட் மற்றும் நிமோனியா தொற்றுக்காக சிகிச்சை பெறும் 1000 தொற்றாளர்கள்
நாட்டில் கோவிட், நியூமோனியா நிலைமைக்காக சுமார் ஆயிரம் பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் மூன்று நான்கு வாரங்களுக்குள் மிகவும் மோசமான நிலைமை ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட், நியூமோனியாவினால் தாக்கப்படுவோரில் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே உயிரிழப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் வேறும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி கைகளை கழுவி, முகக்கவசம் அணிவதனாலும், சமூக இடைவெளியை பேணுவதனாலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்ப்பதன் மூலமும் இந்த நோயிலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.