திருகோணமலையில் துப்பாக்கியுடன் வானில் சிக்கிய 10 பேர் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
திருகோணமலை, கோமரங்கடவல - மல்போறுவ பிரதான வீதியில் துப்பாக்கியுடன் டொல்பின் வானில் பயணித்த 10 பேரைப் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டொல்பின் வான் ஒன்று மறித்து சோதனையிடப்பட்டது.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE
காட்டு மிருகங்கள் வேட்டையாடல்
இதன்போது, வானுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் வேட்டைக்குத் தேவையான உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோமரங்கடவல, பாணந்துறை மற்றும் அட்டுலுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என்றும், இப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் இணைந்து காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காகவே துப்பாக்கியுடன் சென்றிருந்தனர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோமரங்கடவல பொலிஸார், கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, தடை செய்யப்பட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.