ஹோட்டலொன்றில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர் - பின்னணியில் வெளியான தகவல்கள்
கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருந்தொகை பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள சந்தேகநபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்து 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் தங்க தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களும் அவர்களிடம் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.