விளையாட்டுத்துறை அமைச்சர் மீது குற்றம் சுமத்தும் பிரபல வீரர்
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மீது பிரபல வீரர் யுபுன் அபேகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்குத் தான் அரசாங்கத்திடம் 300,000 அமெரிக்க டொலர்களை நிபந்தனையாகக் கேட்டதாக வெளியாகும் செய்திகளை இலங்கை ஓட்டப்பந்தய வீரர் யுபுன் அபேகோன் முற்றாக மறுத்துள்ளார்.
இந்தத் தொகையானது முந்தைய அரசாங்கங்களால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகைகளே தவிர, புதிய கோரிக்கை அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அண்மையில் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் எனக்கும் எனது பயிற்சி குழுவினருக்கும் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளே இந்த 300,000 டாலர் எனக் குறிப்பிட்ட யுபுன் அபேகோன், இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
நான் தொடர்ந்து போட்டியிடுவதற்கு 300,000 டொலர்களை நிபந்தனையாகக் கேட்கவில்லை. முந்தைய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே இந்தத் தொகை அமைந்திருந்தது.
இதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மட்டுமே நான் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் தடகள விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அபேகோன், அமைச்சரின் பகிரங்கக் கருத்துக்கள் தனது கோரிக்கையைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
'யுபுன் எம்மிடம் 300,000 டொலர் கேட்டார், எங்களால் கொடுக்க முடியாது' என்ற தவறான எண்ணத்தை அமைச்சரின் கூற்று உருவாக்கியுள்ளது.
இக்கருத்து தன்னை அரசியல் சேற்றுக்குள் இழுப்பதாகவும், பணத்துக்காக மட்டுமே இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக மக்கள் மத்தியில் காட்ட முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும், வேறு ஒரு நாட்டிற்காகப் போட்டியிடும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் இலங்கைக்காக விளையாடுவதற்கே முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
"இத்தாலிய குடியுரிமையைப் பெறும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், நான் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையே தேர்ந்தெடுத்தேன்.
இலங்கை தேசியக் கொடியைப் பெருமையுடன் ஏந்திச் சென்றேன். நாட்டிற்காகப் விளையாடிய ஒரு விளையாட்டு வீரனை இவ்வாறு சித்தரிப்பதை நான் வன்மையாக மறுக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 300,000 டாலர் தொகையானது தனது பயிற்சிக் கட்டணங்கள் மற்றும் இலங்கைக்காகப் போட்டியிட்டபோது அவரும் அவரது குழுவினரும் செய்த செலவுகளுக்கான நிலுவை மட்டுமே தவிர புதிய நிதியுதவி அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
அரசாங்கம் பணம் தர மறுத்ததால் தான் ஓய்வு பெறவில்லை என்றும், பல வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள அமைப்பின் மீதான விரக்தியினாலேயே தான் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து ஓய்வு பெற்றதாகவும் யுபுன் அபேகோன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam