ஓய்வை அறிவித்த இலங்கையின் அதிவேக வீரர்
100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 10 செக்கன் இலக்கை முதன்முறையாகக் கடந்த தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் யுபுன் அபேகூன், சர்வதேச தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உருக்கமான அறிக்கையொன்றில், 31 வயதான அவர், தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிவிட்ட மனநிறைவுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டுக்குத் தான் எதையும் நிலுவையில் வைக்கவில்லை என்றாலும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியாவில் 10 செக்கன்களுக்குள் 100 மீற்றரைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டியது எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; அது முழு தேசத்திற்குமான வரலாற்றுத் தருணம் என அவர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமது விளையாட்டுப் பயணத்தில் உறுதுணையாக இருந்த பெற்றோர், படித்த பாடசாலைகள், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு, இலங்கை தடகள சங்கம் மற்றும் கிளாடியோ லிச்சியார்டெல்லோ தலைமையிலான இத்தாலிய பயிற்றுவிப்பாளர் குழு ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது சர்வதேசப் பயணத்தின் போது தொடர்ச்சியாக ஆதரவளித்த கோடிக்கணக்கான இலங்கை மக்களுக்கும் தனது நன்றிகளை உரித்தாக்கினார்.
2022 ஆண்டு சுவிட்சர்லாந்தின் லா சோ-டி-ஃபோன்ஸில் (La Chaux-de-Fonds) நடைபெற்ற போட்டியில் 100 மீற்றர் தூரத்தை 9.96 செக்கன்களில் கடந்து, 10 செக்கன் எல்லைக்குக் கீழ் ஓடிய ஒரே தெற்காசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
2022ம் ஆண்டில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 100 மீற்றர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, பல தசாப்தகால இலங்கையின் பதக்க வறட்சியைப் போக்கினார்.
2020ம் ஆணடி்ல் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் 100 மீற்றர் பிரிவில் தகுதிபெற்றுப் போட்டியிட்ட முதல் தெற்காசிய ஆண் ஓட்டப்பந்தய வீரரானார்.
இன்னமும் போட்டிகளில் பங்கேற்கும் திறன் தமக்கு இருக்கும் நிலையிலும், இலங்கை தடகள கட்டமைப்பில் நிலவும் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் காரணமாகவே இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கை விளையாட்டுத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் தனது அனுபவங்கள் குறித்த விரிவான தகவல்களை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகவும் யுபுன் அபேகூன் தெரிவித்துள்ளார்.