யுகதனவி உடன்படிக்கை: அமைச்சர்களின் மனுக்கள் சட்டத்திற்கு புறம்பானவை : சட்டமா அதிபர்
அமெரிக்க “நியு போட்ரீஸ் எனர்ஜி“ நிறுவனத்திற்கு “யுகதனவி“ மின்சார மையத்தின் பங்குகளை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் விசாரணைகள் இரண்டாம் நாளாக இன்று இடம்பெற்றன.
அத்துடன் மனுக்கள் தொடர்பான அடுத்த பரிசீலனை 2022 ஜனவரி 10ம் திகதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் இன்று பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவையின் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், மனுக்களுக்கு எதிராக அடிப்படை ஆட்சேபனைகளை எழுப்பினார்.
அரசியல் அமைப்புக்கு உட்பட்ட வகையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட வில்லை என்பதால் அவற்றை நிராகரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் மனுதாரர்கள் தமது மனுக்களில் அமெரிக்க நியு போட்ரீஸ் எனர்ஜி நிறுவன பணிப்பாளர்களை பிரதிவாதிகளாக குறிப்பிடவில்லை என்பது தவறாகும் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் சமர்ப்பித்த சத்திய கடதாசிகள் அரசியல் அமைப்புக்கு எதிரானவை என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார். எனினும், சட்டமா அதிபரின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் உயர் நீதிமன்றம், மனுதாரர்களின் சமர்ப்பணங்களை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தது.
இதனையடுத்து இலங்கை மின்சார சபையின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டதரணி மனோகர டி சில்வா அமெரிக்க நிறுவனத்துடனான உடன்படிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என குறிப்பிட்டார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் சார்பில் முன்னிலையான சட்டதரணி சாலிய பீரிஸ், இந்த உடன்படிக்கையின் போது உரிய கேள்வி பத்திர முறைமைகள் கையாளப்படவில்லையென்று சுட்டிக்காட்டினார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனக்க அலுவிகார, பிரியந்த ஜயவர்த்தன, விஜித் மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த மனுவின் விசாரணை இன்றும் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஜே வி பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, கர்தினால் மெல்கம் ரஞ்சித், எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் இந்த உடன்படிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.
இவர்கள் தமது மனுக்களில் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச அமைச்சரவை அமைச்சர்கள் நியு போட்ரீஸ் எனர்ஜி நிறுவனம், இலங்கை மின்சார சபை, சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்கள்.
2021 ஜீலை 07ம் திகதி இலங்கை அரசாங்கம் “யுகதனவி ” மின்சார மையத்தின் 40 வீதமான பங்குகளை அமெரிக்க போட்ரீஸ் நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் உடன்படிக்கையை செய்துக்கொண்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
தமக்கு தெரிந்த அளவில் இந்த உடன்படிக்கை தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.