சீன கப்பலால் சர்ச்சை - ஹம்பாந்தோட்டை வான்பரப்பிற்கு திருப்பப்படும் அமெரிக்க இராணுவ செயற்கைகோள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன ஆய்வு கப்பல் வந்துள்ள நிலையில், குறித்த கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சாதனங்கள் என்ன என்பதை அமெரிக்கா வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக இரண்டு அமெரிக்க இராணுவ செயற்கைகோள்களை ஹம்பாந்தோட்டை வான்பரப்பிற்கு அனுப்பும் பணியை அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சீனக் கப்பலின் விவகாரங்கள் குறித்து கண்காணிக்க இந்திய பெருங்கடலில் இந்தியாவின் தொழில்நுட்ப கப்பலான வீ.சி 11184 என்ற கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வேங் 5 (Yuan Wang 5) ஆய்வு, கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் கடந்த 16ம் திகதி பிரவேசித்துள்ளது. இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கியிருந்தது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் 16ம் திகதி முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கப்பல் 11ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், இந்தியாவின் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை வௌிப்படுத்திய நிலையில் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு வௌிவிவகார அமைச்சு சீனாவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே, சீன கப்பல் Yuan Wang 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.