யாழில் போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழப்பு
அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்திக் கொண்ட இளைஞரொருவர் யாழில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த, கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்பு
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த இளைஞர் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞரோடு இருந்த மூவர் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய பின்னர் எஞ்சியிருந்த போதைப்பொருள் அனைத்தையும் இளைஞருக்கு ஏற்றியுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலமாக உட்செலுத்தியதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 30 வயதிற்கும்
குறைந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



