போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிக்க நடைபெறவுள்ள இளைஞர் மாநாடு
நாட்டின் போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, பிரம்மாண்டமான "போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு" ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று(21.05.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள்
இம்மாநாடு குறித்த விரிவான விவரங்கள் வருமாறு:- இளைஞர்களை ஒன்றிணைக்கும் கிராமிய மட்டச் செயற்பாடு போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து இளந்தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நாட்டின் இளைஞர்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவும் கிராமிய மட்டத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்திற்கு இணையாக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஜூன் 26 ஆம் திகதி இம்மாநாட்டை நடத்தவுள்ளன.
போதைப்பொருள் அபாயத்துக்கு ஆளாவதன் காரணமாக, நாட்டின் இளந்தலைமுறையினர் பாரியளவில் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார ரீதியான வீழ்ச்சிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதில் குறிப்பாக 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இளைஞர் மாநாட்டின் திட்டங்கள்
இது நாட்டின் எதிர்கால உழைக்கும் படையின் உற்பத்தித் திறனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
இந்த அபாயத்தை நாட்டிலிருந்து வேரோடு ஒழிப்பதற்கும், இளைஞர்களை அதிலிருந்து மீட்பதற்குமான அரசின் பிரதான திட்டமாகவே "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாட்டின் திட்டங்கள் மற்றும் முதற்கட்ட ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சுபுன் விஜேரத்ன மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






