இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டியை தலைமை தாங்கும் மட்டக்களப்பு வீராங்கனை
2025ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டிக்கு இலங்கை அணியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான தியாகராசா நிஷாளிணி தலைமையேற்றுச் சென்றுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் தற்போது நடைப்பெற்று வருகிறது.
பெண்கள் பிரிவுகளுக்கான இறுதி ஆட்டங்கள்
ஆசியாவின் பல நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் பரபரப்பான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற பெண்கள் கபடி பிரிவு ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகள் மோதின. இதில் இந்தியா அணி மிகுந்த திறமையுடன் விளையாடி, 73 – 10 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக பல இளம் வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்திய நிலையில், மட்டக்களப்பின் கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயத்தைச் சேர்ந்த தியாகராசா நிஷாளிணி, அணிக்கு தலைவியாகப் பங்காற்றியுள்ளார்.
அத்துடன் அதே பாடசாலையை புஸ்பராசா திருஷ்ஷனா மற்றும் தெய்வேந்திரன் பிதுர்ச்சா ஆகியோரும் வீராங்கனைகளாக விளையாடியுள்ளனர்.
இந்தப் போட்டி அக்டோபர் 15 அன்று ஆரம்பமாகி, அக்டோபர் 25 வரை நடைபெறும் என ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான இறுதி ஆட்டங்கள் அக்டோபர் 25 அன்று நடைபெறவுள்ளன. இம்முறை இலங்கை அணியில் மட்டக்களப்பின் கோரகல்லிமடு பகுதியைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இடம்பெற்றிருப்பது, மட்டக்களப்பு விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






