வவுனியா இளைஞர் கைது விவகாரம்! பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள் கிழமை வலுக்கட்டாயமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள் கிழமை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு
குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து (02) திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் அதனை மறுத்த இளைஞன் பொலிஸாருடன் முரண்பட்டிருந்ததுடன், பொரலிஸார் தன்னை தாக்கியதாகவும் கூறியிருந்த காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை நேற்று (03.11) வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய நிலையில், வவுனியா பொது மருத்துவமனையில் பெறப்பட்ட அவரது மருத்துவ அறிக்கையும் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, அவரது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் எந்தவிதமான போதைப் பொருளும் பயன்படுத்தியிருக்கவில்லை என மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் அடிகாயங்கள்
அத்துடன் அவரது உடலில் அடிகாயங்கள் இருப்பதும் மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், அவை தொடர்பாக கருத்தில் எடுத்த நீதவான் குறித்த இளைஞரை பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும், உரிய விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தி.திருவருள் தலைமையில் சட்டத்தரணிகளான திபின்சன் மற்றும் ஜெனனி ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.