லண்டனில் இளம் பெண் படுகொலை! - பொலிஸாருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
லண்டனில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியான Sarah Everardக்கு நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கட்சி வேற்றுமையின்றி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பொலிஸார் கடுமையான முறையில் நடந்துகொண்டதையும் ஒப்புகொண்டனர்.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“லண்டன் நகரில் சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் 33 வயதான Sarah Everard கடந்த 3ம் திகதி தெற்கு லண்டனில் கிளாபம் காமன் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை Sarah Everard சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த யுவதி பொலிஸ் அதிகாரி ஒருரினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Sarah Everard இன் மரணத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளாபம் பகுதியில் ஒன்று கூடிய பொது மக்கள் யுவதியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கோவிட் - 19 விதி முறைகளை மீற வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், பொது மக்களை கலைந்து செல்லுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன், கைது நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
எனினும், தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கட்டாயப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பிரித்தானியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும் கட்சி வேற்றுமையின்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொலிஸார் கடுமையான முறையில் நடந்திருக்கின்றனர் என ஒப்புகொண்டனர். லண்டன் மேயர், பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர், கிளாபம் பகுதியில் காணப்படும் காட்சிகள் ஆழ்ந்த வேதனையடைய செய்கிறது. போராட்டத்திற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்கும் வழி இதுவல்ல என கூறியுள்ளார்.
சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர்கள், மாநகர காவல் ஆணையாளர் கிரெஸ்சிடா டிக் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரியுள்ளார்.
இதேபோன்று உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல், சமூக ஊடகங்களில் பரவி வரும் சில காணொளிகள் கவலை அளிக்கின்றன.
இந்த சம்பவத்தில் நடந்த விடயங்களை பற்றிய முழு அறிக்கையை அளிக்கும்படி மாநகர காவல் துறையிடம் கேட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.