இலங்கையில் தாயை தேடும் 36 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் சென்ற யுவதி
இலங்கையில் இருந்து சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து பிள்ளையாக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யுவதி ஒருவர் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கணவருடன் இலங்கை வந்து தாயை தேடி லோரேன்
லோரேன் என்ற இந்த யுவதி தற்போது திருமணமான பெண். இதற்கு முன்னர் லோரேன் தனது பிரான்ஸ் கணவருடன் இலங்கைக்கு வந்து தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார்.
எனினும் அவரால் தனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க உதவுமாறு அவர் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு கொழும்பு காசல் வைத்தியசாலையில் பிறப்பு
லோரேனிடம் தனது பிறப்பு தொடர்பில் குறைவான தகவல்களே உள்ளன. இதனடிப்படையில் அவர் கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்துள்ளார்.
தாயாரது பெயர் நேன்சி பத்திரகே தயாவதி என லோரேனிடம் இருக்கும் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேன்சி பத்திரகே தயாவதி என்ற பெண் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் எவராவது இருந்தால், அது பற்றி 0772114795 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.