டிக்டொக் நட்பின் விபரீதம்! ஆடம்பர வாழ்க்கைக்காக இளைஞரின் மோசமான செயல்
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து அவர்கள் நினைவிழந்த பின்னர் அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபரொருவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரை, கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தகத் தொகுதியொன்றில் அமைந்துள்ள உணவகத்தில் சந்தித்துள்ளார்.
விடுதியில் கொள்ளை
இதன்பின்னர் சந்தேகநபர் குறித்த நபருக்கு இரகசியமாக மருந்து மாத்திரைகளை அருந்தச் செய்து, அவர் நினைவிழந்த பின்னர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் அவரது வங்கிக் அட்டையிலிருந்து 258,000 ரூபா பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் குறித்த தனியார் வங்கி உதவியாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 28 வயதுடைய இந்தச் சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து பணத்தை அறவிடும் இயந்திரம் ஒன்று, 05 போதை மாத்திரைகள் மற்றும் சில பணத்தாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பணம் மற்றும் தங்க நகைகள் திருட்டு
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இதே பாணியில் மற்றொரு தனியார் நிறுவன அதிகாரி ஒருவரையும் போதையேற்றி, அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு சந்தேகநபர் குறித்த இரண்டு நபர்களிடமிருந்தும் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசந்தேகநபர் திருடிய சில தங்க நகைகளை நீர்கொழும்பு பிரதேசம் மற்றும் கொழும்பு செட்டித் தெருவில் உள்ள நகைக்கடைகளில் விற்றுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர் இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தில் பெரும்பகுதியைச் செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.