வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மரணம்! ஒருவர் கைது(Photos)
வவுனியா-பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (20.08.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்
மதுபானசாலைக்கு நேற்று முன்தினம் சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.
இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர்.இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவலை தெரியப்படுத்தியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில், வவுனியா-மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் துணையுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று (20.08.2023) பிற்பகல் சென்ற பதில் நீதவான்,தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்த சான்று பொருட்களை பார்வையிட்டதுடன், சாட்சியங்களிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
அத்துடன் இறந்த சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களை உடன் கைது செய்யுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.