நாடாளுமன்ற உறுப்பினராகும் யோசித ராஜபக்ச? ஜனாதிபதியிடம் பரிந்துரை
இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வரான யோசித்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற பின்னணியிலேயே இந்த தகவலும் கசிந்துள்ளது.
இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அமைச்சுப் பதவியிலிருந்தும் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பிரதமர் அலுவலக பிரதானி யோஷித்த ராஜபக்ஸவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட கோரிக்கைக்கு அமைய, அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பஷில் ராஜபக்ஸவின் வருகைக்காக, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த, ஜயந்த கோட்டேகொடவிற்கு, வெற்றிடமாகும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஒரு சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜயந்த கெடகொட நிதியமைச்சர் பஷில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகைக்காக தனது உறுப்புரிமையை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.