இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
இலங்கை மத்திய வங்கி தமது நாணயக்கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை, நேற்று (29) நடைபெற்ற தனது கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை (OPR) தற்போதைய 8.75% என்ற அளவில் பராமரிக்க முடிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடுமையான நாணயக்கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம்
2026 மே மாதத்தில் செயல்படுத்தப்பட்ட கடுமையான நாணயக்கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எல் நினோ நிலைமைகளால் எழும் அபாயங்கள் ஆகியவற்றிலும் இதன்போது கவனம் செலுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.7% உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்து, இலங்கை பொருளாதாரம் தொடர்ச்சியான மீள்திறனைக் காட்டியுள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது.
இதற்கிடையில், நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 8% ஆக அதிகரித்துள்ளது.
எரிசக்தி விலை உயர்வின் தாக்கம்
எரிசக்தி விலை உயர்வின் தாக்கம் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்குப் பரவியுள்ளது என்று மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு, ஆகஸ்ட் 2026 இன் முடிவில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதன்படி, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை பணவீக்கம் உயர் ஒற்றை இலக்கங்களில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு படிப்படியாக 5% என்ற இலக்கை நோக்கிக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.