யோஷித ராஜபக்சவின் விசாரணை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
இலங்கை கடற்படையின் 45 ஆவது கடற்படை மாணவர் (Cadet) குழுவின் ஆட்சேர்ப்பிற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களப் பாடத்திற்கு சிறப்பு (C) சித்தியை யோஷித ராஜபக்ச பெற்றிருக்கவில்லை.
மேலும் அவரது கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய ஆவணங்கள் அவரது தனிப்பட்ட கோப்பிலிருந்து (Personal File) திட்டமிட்ட முறையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு விசாரணை அறிக்கை
2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட கடற்படை விசாரணை குழுவின் தலைவர்: ரியர் அட்மிரல் DWB வெத்தேவ உறுப்பினர்கள்: கொமடோர் USR பெரேரா மற்றும் கொமடோர் MMVB மெதகொட ஆகியோர் கண்டுபிடித்தவை,
அதேபோன்று அக்காலப்பகுதியில் திருகோணமலை கடற்படை அகடமியில் (Naval Academy) பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் யோஷிதவின் குழு உறுப்பினர்கள் (Batchmates) வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முழுமையான அறிக்கையிலே மேற்குறிப்பிட்ட தகவல்கள் உள்டக்கப்பட்டிருந்தன.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது ஒரு நிறைவேற்று அதிகாரியாக Executive Officer) தகுதி பெறுவதற்கு டோரா (Dvora) ரக தாக்குதல் படகுகள் அல்லது பிற கடற்படை கப்பல்களில் கடல் பயிற்சி பெறுவது கட்டாயமாகும்.
எனினும் யோஷிதவின் விடயத்தில் இந்த விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டிருந்தன. யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த அக்காலப்பகுதியில் யோஷித ஒரேயொரு முறை மாத்திரமே கடல் பயிற்சிக்காகச் சென்றிருந்தார்.
யோஷிதவை எவ்வித ஆபத்தான கடல் பயிற்சிகளிலோ அல்லது கடமைகளிலோ ஈடுபடுத்த வேண்டாம் என அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் பயிற்றுவிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
யோஷித தங்கியிருந்த விசேட பங்களா
ஒரு கடற்படை அதிகாரிக்கு அத்தியாவசியமான பாடங்களான வரைபடம் வாசித்தல் (Map Reading) மற்றும் ராடார் கண்காணிப்பு (Radar Monitoring) போன்ற முக்கியமான நடைமுறைப் பயிற்சிகளை அவர் பூர்த்தி செய்திருக்கவில்லை.
எழுத்துப் பரீட்சைகளில் யோஷிதவை சித்தியடையச் செய்வதற்காக அப்போதிருந்த பரீட்சகர்களுக்கு உயர் மட்டத்திலிருந்து கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் எந்தவொரு பாதுகாப்புப் பிரிவிலும் இரண்டு வருட கடற்படை மாணவர் (Cadet) பயிற்சிக் காலத்தின் போது அனைவரும் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முகாம்களில் தங்கியிருக்க வேண்டும்.

வீட்டிற்குச் செல்வதற்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்படும். ஆனால் யோஷித ராஜபக்ச பயிற்சிக் காலத்தின் பெரும்பகுதியை கொழும்பிலுள்ள தனது வீட்டிலேயே கழித்தார்.
முகாமில் இருந்த சந்தர்ப்பங்களில் கூட அவர் ஏனைய மாணவர்களுடன் இணைந்து வாழவோ அல்லது அதிகாரிகளின் உணவு விடுதிக்கு (Officers' Mess) செல்லவோ இல்லை. அவருக்காகவே ஒதுக்கப்பட்ட விசேட கடற்படை பங்களா ஒன்றிலேயே அவர் வசித்து வந்தார்.