மகிந்தவின் மற்றொரு மகனுக்கு நீதிமன்றம் சற்றுமுன் வழங்கிய உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு, இம்மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கோடவெல இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
இன்று (13) மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இதற்கமைய, இவ்வழக்கை 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் பணித்தது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய போது, யோஷித ராஜபக்சவை பிரித்தானியாவில் உள்ள 'ராயல் நேவி' (Royal Navy) பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற 'இளம் கடற்படை அதிகாரிகள் பயிற்சிக்காக' முறையற்ற வகையில் பங்கேற்கச் செய்து அரசாங்கத்திற்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது.
இச்செயல் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றமைக்காக யோஷித ராஜபக்ச மீதும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; மொத்தத்தில் இவ்விரு பிரதிவாதிகள் மீதும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்றைய தினம் (13.10.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கடற்படையில் இணைவதற்குத் தேவையான கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையில் இணைக்கப்பட்டு பிரித்தானியாவில் சிறப்புப் பயிற்சியைப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த ஆட்சேர்ப்பு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமல் நீதிமன்றில்
இதேவேளை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மகிந்தவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்டுள்ள 'கிரிஷ்' வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் நாமல் சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று (13) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிற்கு எதிரான வழக்கும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.