யாழ்.செம்மணி மயானத்திற்குள் உருவாகும் பேராபத்து(Photos)
யாழ். செம்மணி மயானத்திற்குள் மெல்லக் கொல்லும் இயல்புடைய ஒரு பேராபத்து மெதுவாய் ஊடுருவி வருகின்றது.
யாழ்ப்பாணம் செம்மணி மயானம் மனித வாழ்விற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பார்த்தீனியத்தினால் நிரம்பியுள்ளது.
மயானத்தினுள்ளும் அதன் சுற்று மதில்களுக்கு வெளியேயும் மதில்களின் ஓரங்களிலும் அவை செழித்து வளர்ந்துள்ளன. செம்மணி மயானத்தின் வெளிப்புறங்கள் வயல் நிலங்களாக உள்ளன. மழைக்காலங்களில் நெல் பயிரிடப்படும் இடமாகவும் கோடை காலங்களில் கால்நடைகளின் மேச்சல் தளமாகவும் பயன்படுகின்றன.
உடல்களை தகனம் செய்யும் இடத்தினைச் சூழ மட்டும் சுத்தம் செய்துள்ள போதும் ஏனைய இடங்களில் பார்த்தீனியம் வளர்ந்துள்ளது.
அவை அதிகளவில் பூத்து காய்திருப்பதனால் அதிக வித்துக்களை அவை தோற்றுவித்துள்ளன. இப்போதுள்ள செடிகளை வெட்டி அகற்றினாலும் அவற்றின் வித்துக்களால் மீண்டும் மீண்டும் அவை முளைத்து வளர வாய்ப்புள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே பார்த்தீனியத்தினை இல்லாதொழிக்க முயன்றிருக்க வேண்டும். நல்லூரில் உள்ள திலீபன் நினைவிடத்திற்கு பின்னாக சற்றுத் தூரத்தில் உள்ள மலசல கூடங்களுக்கு பின்னுள்ள இடங்களிலும் ஆரிய குளத்தின் முன்னுள்ள நடைபாதை நிலத்திலும் பார்த்தீனியத்தை தாம் அவதானித்ததாக யாழ். வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகளிடம் பார்தீனியம் பற்றி கேட்ட போது அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பொது இடங்களில் உள்ள பார்தீனியங்களை அகற்றி பொது மக்களுக்கு முன்னுதாரணமாக பொது அமைப்புகள் இருக்கும் போது மக்களின் காணிகளில் உள்ள பார்த்தீனியங்களை அழிக்கும்படி அவர்களை அறிவுறுத்துவது இலகுவாக இருக்கும் என தான் நினைப்பதாகவும் அவர்களில் ஒருவர் தன் கருத்துக்களை மேலும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.
செம்மணி மயானத்தில் இருந்து பார்த்தீனியம் ஏனைய இடங்களுக்கு பரவும் ஏது நிலைகளை கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இது கவலைக்குரிய விடயமாகும்.
கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் பார்த்தீனியம்
பார்த்தீனியத்தின் இலைகளும் பூக்களும் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என விவசாய திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
பார்த்தீனியத்தின் பூக்கள் பூந்துணர்களை கொண்ட பூக்களாக இருக்கின்றன.ஒரு பூந்துணரில்(பூங்கொத்து) பல பூக்கள் இருப்பதோடு ஒரு பார்த்தீனியம் செடி 5000 வரையான வித்துக்களை உற்பத்தி செய்யக்கூடிய தாவராமாகும்.
மகரந்தமணிகளை அதிகம் கொண்ட பூக்களாக இருப்பதனால் மேச்சல் தரைகளில் வளரும் பார்த்தீனியத்தினால் மகரந்தமணிகள் கால்நடைகளின் சுவாசத்தின் ஊடாக நுரையீரலை இலகுவாக சென்றடைந்து சுவாச நோய்களை ஏற்படுத்தி விடுகின்றன.
புற்களோடு புற்களாக பார்தீனிய இலைகளை உட்கொள்ளும் போது அவை கால்நடைகளின் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு பாலின் ஊடாக இந்த தாவரத்தின் நச்சு பதார்த்தம் கடத்தப்படக் கூடியது என்பதால் பாலினூடாக மனிதர்களையும் பாதிக்கக்கூடியது என விளக்கியிருந்தார்.
மனிதர்களையும் விட்டுவைக்காத பார்தீனியம் செடி
பார்தீனியம் செடியின் இலைகளில் உள்ள மயிரமைப்பு (சுனை என அழைக்கப்படும்) மனித தோலில் எரிவை உருவாக்கும். தோல் புண்கள் ஏற்படலாம் என நெடுங்கேணிப் பகுதியில் பார்த்தீனிய களை ஒழிப்பில் அக்கறை காட்டும் விவசாயி குறிப்பிட்டார்.
பார்தீனியச் செடியின் யாதாயினும் ஒரு சிறு துகள்களாலும் ஒவ்வாமை ஏற்படலாம். நன்கு வளர்ந்த பார்த்தீனியச் செடிகள் நிலத்தை மூடி வளர்கின்றன.
அவற்றை அகற்றும் போது அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது.செடியின் இளநிலையில் அதனை அகற்றுதல் இலகுவானது.
பூக்கும் முன் அகற்றுவதால் புதிய வித்துக்கள் தோன்றுவதையும் தடுக்கலாம் என தன் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் பார்தீனியம் நன்கு வளர்ந்த இருப்பதை அவதானிக்கலாம்.முல்லைதீவின் ஒட்டுசுட்டான் மாங்குளம் மல்லாவி போன்ற இடங்களிலும் அவதானிக்க முடிந்த போதும் முல்லைத்தீவு நகரம், தண்ணீரூற்று, முள்ளியவளை, உள்ளிட்ட செம்மலை வரை பார்தீனியம் செடி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா இராணுவத்தின் பொருந்தாத செயற்பாடு
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அமைதிப்படை என இலங்கையின் வடக்கிற்கு வந்திருந்த இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் விவசாயச் செயற்பாடுகளை நலிவடையச் செய்து தமிழர்களின் பொருளாதாரத்தினை சிதைக்கும் சதி நோக்கோடு பார்த்தீனியத்தினை தமிழர் தாயகப் பகுதிகளில் பரப்பி இருந்தனர்.
அவர்களின் வருகைக்கு முன்னர் தங்கள் பகுதிகளில் பார்த்தீனியச் செடி இல்லை என யாழ். வரணியைச் சேர்ந்த முதியவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். வரணியிலும் அதிகளவில் பார்த்தீனியத்தை காணலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தன் ஆடுகளின் பால் மடி அலர்ச்சிக்குள்ளான சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் ஆடுகளை மேச்சலுக்காக விடும் போது அவை பார்த்தீனியத்தை சாப்பிட்டிருக்க வேண்டும். அலர்ச்சியை அவதானித்த பின்னர் பார்த்தீனியங்களை உண்ணாத வகையில் அவற்றை மேய்த்து வருவதாகவும் இப்போது அப்படி அடிக்கடி நிகழ்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
"மனிதரையும் விடவில்லை.ஆடு மாடுகளையும் வாழ விடாமல் செய்து போட்டாங்கள் தம்பி" என அவர் தன் ஆதங்கத்தினை அவருடனான உரையாடலின் போது பலதடவை இடையிடையே சொல்லியவண்ணம் இருந்தார் என்பது கவனத்துக்குரிய விடயமானது.
அமைதிப்படையாக வந்து அமைதியாக இன்றளவும் சிரமத்தினைக் கொடுக்கக் கூடிய நீண்ட போருக்கான விதையை தூவி விட்டு தன் நாடு திரும்பியிருக்கிறதாகவே பார்த்தீனியம் தொடர்பில் ஈழத்தமிழர்கள் கருதுகின்றனர் என்பதை அவர்களுடனான உரையாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
பார்த்தீனியத்தின் பரம்பல்
அமெரிக்காவின் வெப்பமண்டல தாவரமாக பார்தீனியம் அமைந்துள்ளது.அமெரிக்காவை தாயகமாக கொண்ட இது இன்று ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகளவில் பரவி வளர்ந்துள்ளதாக விஞ்ஞான பாட ஆசிரியரும் நூல் வாசிப்பில் ஆர்வமுள்ளவருமான பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
ஒரு தாவரம் தன் தாயகத்தை விட்டு வேறு நிலங்களுக்கு இடம் மாறிப் போகும் போது ஆக்கிரமிப்பு தாவரமாக மாறிவிடுவதை சூழலில் அவதானிக்க முடியும்.
நாயுண்ணி, ஆகாயத்தாமரை, பார்தீனியம் போன்றவற்றை குறிப்பிடும் அவர் பார்தீனியம் செவ்வந்தி, சீதேவியார் செங்கழுநீர் போன்ற தாவரங்களின் இயல்புகளை ஒத்திருந்த போதும் அவற்றிலிருந்து வேறுபட்டு ஆக்கிரமிப்பு செடியாக வளர்ந்து வருகின்றது.
Parthenium hysterophorus.L எனும் விஞ்ஞானப் பெயரைக் கொண்டது.அங்கிகளுக்கான விஞ்ஞான முறைப் பெயரீட்டை அறிமுகம் செய்த கரோலஸ்லீனியசால் இந்த பார்தீனியம் பெயரிடப்பட்டுள்ளது.
கரட் புல்,மல்லிக்கிழங்கு புல்,கசப்புப்புல் எனவும் அழைக்கப்படும் பார்தீனியம் இந்தியாவில் காங்கிரஸ் புல் எனவும் அழைக்கப்படுகிறது.
பார்தீனியன், அம்புரோசின் அகிய நச்சுப் பதார்த்தங்கள் கொண்ட இந்த பார்தீனியத்தின் வித்து நீண்ட உறங்கு நிலையை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலத்திற்கு மண்ணில் இருந்து சாதகமான ஈரலிப்பான சூழல் கிடைக்கும் போது அவை முளைக்கின்றன எனவும் அவர் விளக்கியிருந்தார்.
விளைநிலங்களையும் இயற்கையாக நம் நிலங்களில் வளரும் தாவரங்களையும் நாம் பாதுகாக்க வேண்டுமெனில் ஆக்கிரமிப்பு இனமான பார்த்தீனியத்தினை கட்டுப்படுத்துவது இன்றியமையாதது.
தான் வாழும் நிலத்தில் ஏனையவற்றை வாழ விடாது தான் மட்டுமே பெருக்கமடையும் உயிரக்கூட்டம் ஆக்கிரமிப்பு இனம் எனப்படுவதும் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



