மட்டக்களப்பு சென்ற கஜேந்திரகுமாரிற்கு ஏற்பட்ட நெருக்கடி: அம்பிட்டிய தேரரால் பதற்றம்(Video)
மட்டக்களப்பு பண்ணையாளர்கள் எதிர்நோக்கு மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக மயிலத்தமடு பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் சென்றிருந்த நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை பொலிஸார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
அனுமதி வழங்கவில்லை
இன்று(15) காலை மட்டக்களப்பில் இருந்து பண்ணையாளர்களுடன் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் அப்பகுதி எல்லையில் அமைக்கப்பட்டிருக்கின்ற பொலிஸ் காவலரணுக்கு அருகாமையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து அப்பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி செயலாளரிடம் தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்த நிலையில் குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் விஜயம் செய்தார்.
இதன் போது சற்று குழப்ப நிலை உருவாகியது அதன் பிற்பாடு குறித்த இடத்தில் இருந்து திரும்பி செல்வதற்கு முன்னர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூச்சலிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவித பதில்களும் தேரரிற்கு தெரிவிக்காமல் அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றனர்.
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றக்கோரி கடந்த 90 நாளுக்கு மேலாக போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.